தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலி மூலம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

தமிழகத்தில் சற்றே குறைந்திருந்த கரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் தொற்று பாதிப்பு 75 சதவீதம் அதிகரித்துள்ளது.

நேற்று (மார்ச் 16) மட்டும் ஆண்கள் 476, பெண்கள் 360 என தமிழகத்தில் புதிதாக 836 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 317 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை, தமிழகம் முழுவதும் 8.58 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்98 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

4 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கரோனா பரவல்:

தற்போது, சென்னை,செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் குறைவாகவே உள்ளது.

திருமணம், பிறந்தநாள், துக்க நிகழ்வுகள், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் பங்கேற்பவர்கள் முகக் கவசம்அணியாததாலும், சமூக இடை வெளியை கடைபிடிக்காததாலும் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளாது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தஞ்சை மாணவிகளின் பெற்றோருக்கும் கரோனா:

இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கரோனா தொற்றால் 52 மாணவிகள் பாதிகப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்து 300க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 5 பெற்றோருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே