கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை – பிரதமர் மோடி

கொரானா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால், அந்நோய் தொற்று குறித்து, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

சீனாவிலிருந்து இருந்த கேரளா திரும்பிய 3 பேர் கொரானா பாதிப்புக்கு உட்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின்னர், அண்மையில் பூரண நலம்பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், நேற்று, மூன்று வெவ்வேறு மாநிலங்களில், இத்தாலி நாட்டவர் உட்பட 3 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில், கொரானா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவிட்-19 (COVID-19) என்று அழைக்கப்படும் கொரானா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளின் அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும், கொரானா அறிகுறி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதாகவும், பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கொரானா அறிகுறி பரிசோதனைகளில், மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறையினரும், ஒருங்கிணைந்து, தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து, பொதுமக்கள் அச்சபடத் தேவையில்லை என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். 

நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அவரவர் சுய சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம், சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனில், அடிக்கடி கைகளை கழுவுவது, ஒருவர் மற்றவொருடன் பேசும்போது, நெருக்கமாக நின்று பேசாமல், குறைந்தபட்சம் நல்ல இடைவெளியில் நின்று பேசுவது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஒவ்வொருவரும், தங்கள் கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்ப்பது என்பது, கொரானாவிலிருந்து தப்பிப்பதற்கான மற்றொரு வழிமுறை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே