ஓடும் ரயிலில் கழிவறைக்கு சென்ற கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்து தொல்லை கொடுத்த டிடிஆர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் மாணவி தங்கியிருந்த ஹாஸ்டல் அறையை காலி செய்யும்படி நிர்வாகம் தெரிவித்தது.

இதனால் அந்த மாணவி தனது தம்பியுடன் கோவை சென்று ஹாஸ்டலைக் காலி செய்துவிட்டு கோவையிலிருந்து சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார்.

ரயில் அதிகாலை 5 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தை கடந்து செல்லும்போது கல்லூரி மாணவி கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது டிடிஆர் ஒருவர் ரயில் படிக்கட்டில் நின்றபடி வெளிப்புறமாக கையை நீட்டி கழிவறையில் உள்ள சிறிய ஜன்னல் பகுதி வழியாக புகைப்படம் பிடித்துள்ளார்.

இதை கழிவறையில் இருந்து பார்த்த மாணவி சுதாரித்துக் கொண்டு வெளியே வந்து டிடிஆரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு சக பயணிகளின் உதவியுடன் செல்போனை வாங்கி பார்த்ததில் சில படங்கள் இருந்தது தெரியவந்தது.

இதற்கிடையே ரயில் பெரம்பூர் ரயில்நிலையம் வந்து விட, இந்த பிரச்னை தொடர்பாக பெரம்பூர் ரயில்வே காவலர்களிடம் மாணவி புகார் கொடுத்தார்.

புகார் மனு அரக்கோணம் ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

ரயில்வே காவல் துறை ஆய்வாளர் விஜயலட்சுமி விசாரித்து அந்த மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சேலம், சூரமங்கலத்தைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் மேகநாதனை(26) கைது செய்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே