பெங்களூருவில் நடைபெறும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 287 ரன்களை ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.
இந்நிலையில் கோப்பை எந்த அணிக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னரை 3 ரன்களில் சாய்த்து முகமது ஷமி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஆரோன் ஃபிஞ்சும் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஸ்டீவ் ஸ்மித்துடன், மார்னஸ் லாபுசாக்னே கைகோர்த்தார்.
இருவரின் நிதானமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
இந்நிலையில் லாபுசாக்னேயை 54 ரன்களில் ஆட்டமிழக்க செய்து அந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார்.
அதற்கடுத்து வந்த ஸ்டார்க்கையும் டக் அவுட் ஆக்கி ரவீந்திர ஜடேஜா வெளியேற்றினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித், நங்கூரம் போல நிலைத்து நின்று சதமடித்தார். அவரும் 131 ரன்களில் வெளியேறினார்.
பிறகு வந்த வீரர்களில் அலெக்ஸ் கேரி மட்டும் 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்தது. அதிகபட்சமாக முகம்மது ஷமி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.