5 கிலோ எடையிழந்தேன், வயிற்றுக் கோளாறினால் ஜாக் லீச் டாய்லெட்டில்தான் அதிக நேரம் இருந்தார்: பென் ஸ்டோக்ஸின் வேதனை பகிர்வு

ஆலி போப், ஜாக் கிராலி, டாம் சிப்ளி மனம் தளர வேண்டியதில்லை. நீங்கள் நிச்சயம் பிரமாதமான வீரர்கள்.என் கிரிக்கெட் வாழ்க்கையிலும் இத்தகைய தன்னம்பிக்கை இழக்கும் தருணங்களைச் சந்தித்து மீண்டிருக்கிறேன். உங்கள் நம்பிக்கையை இத்தகைய பயணங்கள் தகர்க்கும் என்பதை நானும் புரிந்து கொள்கிறேன்.

அகமதாபாத் டெஸ்ட்டின் போது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு வயிற்றில் உபாதை ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் ஒருவாரத்தில் 5 கிலோ உடல் எடையை இழந்ததாகவும் வயிற்றுக் கோளாறினால் ஜாக் லீச் மைதானத்தை விட டாய்லெட்டில்தான் அதிக நேரம் இருந்தார் எனவும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தொடரை 3-1 என்று இழந்தது, டி20 தொடர் மார்ச் 12ம் தேதி நடைபெறுகிறது

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:

நாங்கள் இங்கிலாந்து அணிக்காக முழுதும் அர்ப்பணிப்புடன் இருந்தோம். 41 டிகிரி வெயில் உடலுக்கு நல்லதல்ல, அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட்டன, ஒருவாரத்தில் நான் 5 கிலோ உடல் எடையை இழந்தேன்.

ஜேக் லீச் பவுலிங் ஸ்பெல்லுகளுக்கு இடை இடையே பெவிலியன் சென்றார், களத்தில் லீச் இருந்த நேரத்தை விட டாய்லெட்டில் இருந்த நேரமே அதிகம். ஆனால் இதெல்லாம் சாக்குப்போக்கு அல்ல, அனைவரும் டெஸ்ட்டில் விளையாட முழு மனதுடன் இறங்கினோம். ஆனால் இந்தியாவும் ரிஷப் பந்த்தும் பயங்கரமாக ஆடிவிட்டார்கள்.

ஆனால் இங்கிலாந்து வீரர்கள் கடினமான புறச்சூழலில், உடல் கோளாறுகளுடன் போட்ட முயற்சிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அவர்கள் இங்கிலாந்து வெல்ல அனைத்து முயற்சிகளையும் பங்களிப்பையும் செய்தார்கள்.

விமர்சிப்பவர்களும் கிரிக்கெட் வல்லுநர்களும் அவர்கள் வேலையைச் செய்கின்றனர். ஆனால் எங்களை இன்னும் சிறந்த வீரர்களாக உருவாக்குவதில் அவர்களுக்கு பங்கு உள்ளது. இது எங்கள் பணி அதைத்தான் எதிர்நோக்குகிறோம்.

நிறைய வீரர்களுக்கு இதுதான் இந்தியாவில் முதல் கிரிக்கெட் பயணம். இது இவர்களுக்கு ஆழமாகக் கற்கும் பயணமாகும். ஆலி போப், ஜாக் கிராலி, அல்லது டாம் சிப்ளி நாம் இந்த உயர்ந்த டெஸ்ட் தளத்துக்கு லாயக்கற்றவர்கள் என்று மனம் தளர வேண்டியதில்லை. நீங்கள் நிச்சயம் பிரமாதமான வீரர்கள்.

என் கிரிக்கெட் வாழ்க்கையிலும் இத்தகைய தன்னம்பிக்கை இழக்கும் தருணங்களைச் சந்தித்து மீண்டிருக்கிறேன். உங்கள் நம்பிக்கையை இத்தகைய பயணங்கள் தகர்க்கும் என்பதை நானும் புரிந்து கொள்கிறேன்.

ஏமாற்றத்தையே வெற்றியின் படிகளாக மாற்றி உங்களை நீங்களே உத்வேகப்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

இப்படி ஒன்றரை நாளிலும் 2 நாட்களிலும் டெஸ்ட் முடியுமாறு ஒரு தரமற்ற குப்பைப் பிட்சைப்போட்டு பல வீரர்களின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தியதுதான் இங்கிலாந்துக்கு இந்தத் தொடரில் நடந்தது என்பதை சூசகமாக பென் ஸ்டோக்ஸ் சுட்டிக்காட்டிவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே