இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன, இதில் 56 புள்ளி 28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 3,570 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது.

17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் நீட் தேர்வை எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. தமிழ்வழியில் 31 ஆயிரத்து 965 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர். நீட் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது. இதில், ஹரியானாவை பூர்விகமாக கொண்ட தனிஷ்கா முதலிடம் பெற்றுள்ளார். ராஜஸ்தான் கோட்டாவிலுள்ள பயிற்சிப் பள்ளியில் பயின்றவர் இவர்.

தேசிய அளவில் முதலிடம் பிடித்தது குறித்து பேசிய தனிஷ்கா, மதிப்பெண்களுக்கான தனது பெற்றோர் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் ஊக்கம் அளித்தனர் என்றும் தெரிவித்தார். மேலும், தினமும் 5-6 மணி நேரம் தேர்வுக்காக படித்ததாக கூறியுள்ள தனிஷ்கா, தேர்வுக்கு முதல் நாளில் இருந்தே தயார் ஆக வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் தயாராகுவது கூடாது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்வு எழுதிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவர்களுள், 67 ஆயிரத்து 787 பேர் நீட் தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா தேசிய அளவில் 30-வது ரேங்கையும், எம். ஹரிிணி 43-வது ரேங்கையும் பெற்றுள்ளனர். தேசிய அளவில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார். தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமையின் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம், ,

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே