சென்ட்ரல் விஸ்டா அவென்யூ வளாகத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!

புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

“சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டெல்லி இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான ராஜ்பாத் பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் இல்லங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவை பல கோடிகள் செலவில் கட்டப்பட்டு வருகிறது.

இதில், இந்தியா கேட் முதல் விஜய் சவுக் வரையிலான மூன்று கிலோ மீட்டர் தூரப் பகுதி சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என்று அழைக்கப்படுகிறது. சிவப்பு கிரானைட் கற்கள் பதியப்பட்ட நவீன நடைபாதைகள்,கால்வாய்கள், பாலங்கள் என மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, குளிர்கால கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என முழு மூச்சுடன் பணிகள் நடந்து வருகிறது.

விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான தோட்டங்கள், உணவகங்கள், நடைபாதை உள்ளிட்டவை அடங்கிய வளாகத்தைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூவர்ணக் கொடி நிறத்தில் வண்ணம் தீட்டும் பணிகள் வேகமெடுத்துள்ளது. மேலும் ராஜ்பாத் என்ற பெயரை மத்திய அரசு கர்த்தவ்யா பாத் எனப் பெயர் மாற்றம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே