கொரோனா வைரஸ் தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர், வெளிநாட்டில் இருந்து திரும்பிய அனைவரும் கண்டிப்பாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; மீறினால் 6 மாத சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

சமூகத்தில் பீதியை உருவாக்கும் வகையில், தவறான தகவல்களை பரப்பினால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய குற்றவியல் சட்டம் 270வது பிரிவு படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வீரியமிக்க வைரஸ் பரவலுக்கு, தெரிந்தே எவர் ஒருவர் காரணமாக இருப்பது உறுதி ஆனால், 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

அரசின் உத்தரவை மீறி, ஆபத்தான வைரஸ் தொற்று பரவுவதற்கான செயலில் ஈடுபட்டாலோ அல்லது அலட்சியமாக நடந்து கொண்டாலோ, இந்திய குற்றவியல் சட்டம் 269வது பிரிவின் கீழ், 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தனிமை முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டவர்கள், அரசின் உத்தரவுக்கு கீழ் படியாமல் இருந்தால்,

இந்திய குற்றவியல் சட்டம் 271 வது பிரிவு படி, 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே