நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ராசிபுரம் அருகேயுள்ள ப.மு.பாளையத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க முயன்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அதில், தொழிலாளர்கள் சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் புதிதாக வீடு கட்டிக்கொண்டிருந்தார்.
இன்று வீட்டில் முட்டு பலகை பிரிக்கும் பணிக்காக 5 கூலி ஆட்கள் வேலைக்கு வந்துள்ளனர். அந்த வீட்டிற்காக புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியை பாலிதீன் கவர் கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த கவரை பிரித்து ஆட்கள் தொட்டியின் உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது அவர்களை கார்பன் டை ஆக்ஸைடு வாயு தாக்கியுள்ளது. அப்போது முருகேசன், சஞ்சய் ஆகிய இருவர் மயங்கி தொட்டியில் விழுந்தனர்.
அவர்களை காப்பாற்ற சென்ற மீதம் மூவரும் மயக்கமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டதும், ராசிபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 5 பேரையும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அதில் சஞ்சய் மற்றும் முருகேசன் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாகவே இறந்ததாக கூறப்படுகிறது.