சென்னையுடன் உங்கள் “காதல் கதை” தொடர்வதில் மகிழ்ச்சி என எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள் தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தோனி. கிரிக்கெட்டை ரசிக்கும், விளையாடும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த தோனி, திடீரென நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “அன்புள்ள எம்எஸ் தோனி, விளையாட்டு மற்றும் வாழ்க்கையில் சாதிக்க சுய நம்பிக்கை எவ்வாறு உதவும் என்பதை நிரூபித்ததற்கு நன்றி.
ஒரு சிறிய நகரத்திலிருந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்த உங்களின் கணக்கிடப்பட்ட அபாயங்கள் மற்றும் அமைதியான நடத்தை இந்திய அணியால் தவறவிடப்படும். சென்னையுடன் உங்கள் காதல் கதை தொடர்ந்ததில் மகிழ்ச்சி.” என குறிப்பிட்டுள்ளார்.