2ம் வகுப்பு மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

டாஸ்மாக் கடைகளில் கவனம் செலுத்தும் தமிழக அரசு பள்ளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதில் ஏன் அலட்சியம் காட்டுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரசு ஆரம்ப பள்ளி கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதாக முத்தரசி என்ற இரண்டாம் வகுப்பு மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் பழுதடைந்து உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மனு அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, டாஸ்மாக் கடைகளுக்கு இடங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் அரசு, பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அலட்சியம் செயல்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

டாஸ்மாக் வருமானத்தை அதிகப்படுத்த பல வழிகளை கடைபிடிக்கும் அரசு, பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் அப்போது அறிவுறுத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் அக்டோபர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் ஆணையிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே