மீன்பிடிப்பது தொடர்பாக, கன்னியாகுமரி, நெல்லை மீனவர்கள் இடையே பிரச்சனை

சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து செல்லும் கன்னியாகுமரி மீனவர்களின் விசைப் படகுகளால், தாங்கள் கடலில் விரிக்கும் வலைகள் அறுந்து போவதாக நெல்லை மாவட்டம் இடிந்தகரை, கூட்டப்புளி, கூத்தங்குழி உள்ளிட்ட மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதேபோல், நெல்லை மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதாக கன்னியாகுமரி மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக இரு தரப்பினரும் கடலில் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, நெல்லை மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் சின்னமுட்டம் துறைமுகத்தை முற்றுகையிட புறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள், சின்னமுட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

இதை அடுத்து சின்னமுட்டம் துறைமுகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, நெல்லை மீனவர்கள் நாட்டுப் படகில் சின்னமுட்டம் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட கன்னியாகுமரி மீனவர்கள் துறைமுகத்தில் திரளவே மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.

கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் ரோந்துப் படகில் சென்று நெல்லை மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து அந்த மீனவர்கள் திரும்பிச் சென்றனர்.

பின்னர் இருதரப்பு மீனவ அமைப்பு பிரதிநிதிகளையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி பிரச்சனை ஏற்படாது என அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து இயல்பு நிலை திரும்பியது.

இரு தரப்பு மீனவர்கள் இடையேயான பிரச்சனைக்கு ஜூடு என்ற நபர் தான் காரணம் என சின்னமுட்டம் மீனவ அமைப்பினர் புகார் கூறியுள்ளனர்.

மீன்களுக்கு உரிய விலை கேட்ட காரணத்தால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுத்துவதாக ஜூடு என்பவர் மீது அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே