வெங்காயத்தை தொடர்ந்து பூண்டின் விலையும் கிடுகிடுவென உயர்வு

வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் கடுமையாக உயர்ந்து கிலோ 240 ரூபாய் வரை விற்பனையாகிறது.

3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு விலை 30 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 8 மடங்கு உயர்ந்து 240 ரூபாயாக உள்ளது.

பூண்டு அதிகம் விளையும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

குறிப்பாக மத்தியபிரதேசத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவில் பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

முன்பு வழக்கமாக தினமும் 10 முதல் 15 லாரிகளில் பூண்டு வரத்து இருந்ததாகவும், தற்போது வடமாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாக பூண்டு விளைச்சல் வெகுவாக பாதித்து, வரத்தும் குறைந்து 2 லாரிகள் மட்டுமே வருவதாகவும் சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரி கூறுகிறார்.

இதன் காரணமாகவே பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மலைப்பூண்டு கிலோ 240 ரூபாயுக்கும், 2 ஆம் தர பூண்டு 210 ரூபாயுக்கும், 3 ஆம் தர பூண்டு 180 ரூபாயுக்கும் விற்பனை ஆகிறது.

கோயம்பேடு மார்க்கெட் விலையை காட்டிலும் சூப்பர் மார்க்கெட்களில் பூண்டின் விலை 5 முதல் 8 ரூபாய் வரை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

உரித்த பூண்டின் விலை கூடுதலாக 2 ரூபாய் சேர்த்து விற்கப்படுகிறது.

தெருக்கடைகளில் 240 ரூபாய் முதல் 245 ரூபாய் வரை பூண்டு விற்பனை ஆகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே