புரட்டாசி மாத பிறப்பையொட்டி வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்

புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில், மீன், சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசியில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மக்கள் இறைச்சி உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளையே உண்டு வருகின்றனர்.

இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்து, இறைச்சி பொருட்களின் விற்பனை மந்தமாக நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் பிறந்தது முதல் சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சி, கோழி மற்றும் மீன் கடைகளில் விற்பனை மந்தமானது.

பவானிசாகர் ஆலையில் பிடிக்கப்படும் மீன்கள் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்படுவது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக வரிசையில் நின்று மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள் இன்று வராததால் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே