தஞ்சையில் ஒரு பகுதியில் ஆவின் பால் கெட்டுப்போனதாக புகார்

தஞ்சையில் ஒரு பகுதியில் விற்கப்பட்ட ஆவின் பால் கெட்டுப்போனதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, கூட்டுறவு காலனி, உமா நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் இன்று காலை வழக்கம் போல் வாங்கும் கடைகளுக்கு சென்று ஆவின் பால் பாக்கெட்டுகள் வாங்கிச்சென்றனர். பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சியபோது பால் கெட்டுபோய் திரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீதம் உள்ள பாலை எடுத்துச் சென்ற அவர்கள் கடைக்காரரிடம் முறையிட்டனர். அப்போது மேலும் பல வாடிக்கையாளர்களும் இதுபோல் வந்து ஆதாரத்துடன் புகார் தெரிவித்தனர். இந்த மூன்று பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட பால் மட்டும் கெட்டுபோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு தான் பொறுப்பு ஏற்க முடியாது என்று தெரிவித்த கடைக்காரர், ஆவின் டோல் பிரீ எண்ணுடன் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த எண் செயல்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

பால் விநியோகஸ்தரிடம் இதுபற்றி கேட்டபோது, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இந்த புகார் வந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே