மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 8 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் இலக்கை 7 மாதங்களுக்கு முன்னதாகவே எட்டி விட்டதாக அறிவித்தார். இவ்விழாவில் 8 கோடி பேரில் கடைசி நபராக ஆயிஷா ஷேக் என்பவருக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக மும்பையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பல்வேறு மெட்ரோ கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தற்போது 11கிலோ மீட்டர் தூரம் மட்டுமே மெட்ரோ ரயில் தடம் 2023-ம் ஆண்டுக்குள் 325 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவடையும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மும்பையில் மின்சார ரயில் சேவைக்கு ஈடு இணையாக அதே அளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் மெட்ரோவின் சேவையும் இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். சில நிமிடங்களுக்குள் மும்பையில் எங்கும் பயணிக்கலாம் என்ற நிலை உருவாகும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளால் பத்தாயிரம் பொறியாளர்கள் மற்றும் 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

சுமார் 20,000 கோடி ரூபாய்க்கான நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இதுவரை மும்பை மெட்ரோ போக ஒன்றரை லட்ச கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டியில் பிரதமர் மோடி சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே