இ-பாஸ் நடைமுறையால் கல்லூரி சேர்க்கை பணிக்காக செல்லும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்: டி.டி.வி!!

இ-பாஸ் நடைமுறையால் கல்லூரி சேர்க்கை பணிகளுக்காக செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் சிரமம் அனுபவிக்கிறார்கள் என அமமுக கட்சி பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதனால் மதிப்பெண் சான்றிதழை காட்டினாலே போதும் இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லவேண்டுமானால் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவம், மரணம், திருமணம் போன்றவற்றிற்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரியில் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளன. கல்லூரி சேர்க்கைக்காக மாணவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் இ-பாஸ் நடைமுறை அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால்,அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே,மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும். மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என உடனடியாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே