விதிகளை மீறி பேனர்களை வைத்தால் குற்றவியல் நடவடிக்கை

விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர்களை வைத்தால் குற்றவியல் நடவடிக்கையுடன், ஓராண்டு சிறை, 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேனர்கள் வைப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடிகள், கட்-அவுட்டுகள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக, உள்ளாட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் நிறுவக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்களுடன் மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவு விவரம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அரசியல் கட்சியினர் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் சில தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடை பாதைகளில் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் நிறுவ தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன், ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் பேனர்கள் அச்சிடுபவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் அவசர, அவசரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 20,000 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும், அச்சக உரிமையாளர்களுடனும் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுரைகளும் சட்ட திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் மீறி சட்டத்திற்கு புறம்பாக விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் அமைப்பவர்கள் மீது ஓராண்டு சிறை தண்டனை அல்லது ஒரு விளம்பர பதாகைக்கு 5,000 ரூபாய் வீதம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 15மண்டலங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 3964 விளம்பரப் பதாகைகள் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் அகற்றப்பட்டு 245 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை கண்காணித்து அகற்ற ஏதுவாக சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாகனம் வீதம் தனி அலைபேசி எண்ணுடன் கூடிய மூன்று ரோந்து வாகனங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

விளம்பர பதாகைகளை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து, விளம்பரம் அமைத்தவர்கள் குறித்த தகவல்களையும் பதிவு செய்து அவற்றை அகற்றுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே