ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் புதிய திட்டத்தை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர்

50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் புதிய திட்டத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தொழிற்துறை உற்பத்தி மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும், தொழிற்துறை உற்பத்தி மீட்சி அடைவதற்கான அறிகுறிகள் தெளிவாகவே தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக 4 சதவீதத்திற்குள் வைக்கப்பட்டிருப்பது, பொருளாதாரம் ஆரோக்கியமாக இருப்பதையே காட்டுவதாக நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

அன்னிய நேரடி முதலீடுகளின் வரத்து திடமாக இருப்பதாகவும், அன்னிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட்டில் உயர்ந்திருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில், நாட்டின் 4 நகரங்களில் மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நகைகள் மற்றும் ஆபரணக் கற்கள், கைவினைப்பொருட்கள், யோகா, சுற்றுலா, ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் தொடர்பாக இந்த மாபெரும் ஷாப்பிங் திருவிழாக்கள் நடத்தப்பட இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். ஏற்றுமதிப் பொருட்கள் மீதான வரிச் சலுகைகள் என்ற புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை விட்டுக்கொடுக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அனைத்து வரிச் சலுகை திட்டங்களையும்விட ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஊக்கமளிக்கும் வகையில் இந்த புதிய திட்டத்தால் பயன் கிடைக்கும் என அவர் கூறினார். 

வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஜிஎஸ்டி முறையில், இன்புட் டாக்ஸ் கிரடிட்டுகளை திருப்பி அளிப்பது, முழுக்க மின்னணு தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். விரைவாகவும், தானியங்கி முறையிலும் இன்புட் டாக்ஸ் கிரடிட்டுகளை திரும்பப் பெறுவதற்காக இந்த முறை செயல்படுத்தப்படுவதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டி முடிக்கப்படாமல் இருக்கும், நடுத்தர வீட்டு வசதி திட்டங்களுக்கு, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியளிக்கும் வகையிலான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

ஏற்றுமதியாளர்களுக்கான செயல்பாட்டு மூலதனத்திற்கு கடனளிக்கும் வங்கிகளுக்கு உயர் காப்பீட்டு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 1700 கோடி செலவாகும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வரும் 19ஆம் தேதி பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்கள், துறைமுகங்களில் ஏற்றுமதி சரக்குகளை விரைந்து அனுப்பும் வகையில் சர்வதேச தரமுறைகள் பின்பற்றப்படும் என்றும், இதை கண்காணிக்க, அமைச்சகங்களின் கூட்டுக்குழு அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே