ஆயிரம் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் இணையை தங்களுக்கான சிறப்பு ரயில் பயணம் மூலமாக தேர்ந்தெடுக்கின்றனர். எங்கு நடக்கிறது இந்த பயணம் எவ்வாறு அவர்கள் ஒன்றிணைகிறார்கள் ?? விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.
வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் ஒரு ரயில் பயணத்தின்போது சமீரா ரெட்டியை பார்க்கும் சூர்யா, பார்த்தவுடனேயே காதலில் விழுந்து விடுவார். ரயில் பயணங்களில் காதல் மலர்வது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல. நிஜத்தில் அப்படி ஒரு சம்பவம் நடப்பது என்பது அபூர்வமானது. அப்படி ஒரு சம்பவம் தங்கள் வாழ்வில் நடந்துவிடாதா என்ற ஏக்கம் சிங்கிளாக இருக்கும் பல இளைஞர்களுக்கும் உண்டு.
அப்படிப்பட்ட இளைஞர்களுக்காக ஒரு சேவையை சீன அரசாங்கமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றது. சீன ரயில்வே நிர்வாகம் செண்டூ என்ற பகுதியில் உள்ள இளைஞர் அமைப்புடன் இணைந்து இந்த டேட்டிங் சேவையை செய்து வருகின்றது. இந்த சிறப்பு 2நாள் இரயில் சேவையில் ஆயிரம் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் பயணிக்கலாம். இந்த பயணத்தின்போது தங்கள் இணையை அறிவதற்கும், அவர்களைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் பல விளையாட்டுகளை ரயில்வே நிர்வாகம் கட்டமைத்து உள்ளது.
இந்த ரயில் பயணத்தில் காதலை தொடங்கிய பத்து ஜோடிகள் தற்போது திருமணம் செய்து கொண்டு பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த பயணத்தின் மூலம் அறிமுகமான பலர் காதலில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் ஒரு அங்கமாக சீனாவின் பழமை வாய்ந்த ஒரு நகரத்தின் நதிக்கரையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சியும் அவர்களுக்கு என தனி விருந்தும் இடம்பெறுகின்றது. அடுத்த 30 ஆண்டுகளில் மூன்று கோடி சீன இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலை உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 1970 ஆம் ஆண்டு தொடங்கி 2016 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த ஒரு குழந்தை திட்டத்தால் பலர் தங்கள் கருவில் இருந்த பெண் சிசுவை கலைத்ததே சீனாவின் இந்த நிலைக்கு காரணம். 2018 ஆம் ஆண்டு மட்டும் 1000 இளைஞர்களில் 7 பேருக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது.
காதலர்களை தேர்ந்தெடுப்பது இளைஞர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. இந்த நிலையை மாற்ற நினைத்து சீன அரசு தொடங்கிய காதல் ரயிலில் இடம் கிடைக்க வேண்டி சீன இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.