தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில முதல் பெண் ஆளுநர் ஆக முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் களத்தில் தமிழிசை சவுந்தரராஜனின் பயணத்தை தற்போது பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள், காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரின் சகோதரர் மகள் என அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தில் தமிழிசை பிறந்ததால், பள்ளிப்பருவத்தில் இருந்தே தமிழிசைக்கு அரசியல் ஆர்வம் அதிகம் இருந்தது.

காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் பாஜகவின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட கட்சியின் மாணவ அமைப்பான ABVP – யில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டார்.

“பெண் சக்தி இயக்கம்” என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும், பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தலைவராக இருந்த பொற்றாமரை இலக்கிய அமைப்பின் செயலாளராகவும் தமிழிசை சவுந்தரராஜன் சமூக பணியாற்றி வந்தார்.

15 ஆண்டுகளாக பாஜக கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த இவர், அக்கட்சியில் மாவட்ட, மாநில மருத்துவ அணி செயலாளர், மாநில துணை தலைவர், தேசிய செயலாளர் என கடும் போராட்டத்திற்குப் பிறகு படிப்படியாக உயர் பதவிக்கு வந்தார்.

2006 ஆம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்ற தேர்தலிலும் 2011 ஆம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்ற தொகுதியிலும் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதேபோல் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மூன்றாம் இடம் பிடித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார் தமிழிசை. இதன் மூலம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவர் என்ற கௌரவத்தையும் அவர் பெற்றார்.

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அரசியல் களத்தில் பாஜகவில் தற்போது உள்ள 35க்கும் மேற்பட்ட மாநில தலைவர்களில் தமிழிசை மட்டுமே பெண் தலைவர் என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தேமுதிக பாமக புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து மாற்று அரசியல் பாதையை தமிழகத்தில் முன்னெடுத்த பெருமையும் தமிழிசைக்கு உண்டு.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவினாலும் அதன் வாக்கு வங்கியை அதிகரித்ததற்கு தமிழிசை முன் எடுத்த முயற்சிகளும், தேர்தல் வியூகங்களும் முக்கிய காரணமாக அமைந்ததாக பேசப்பட்டது.

இதுவரை, 2017 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனராக மத்திய அரசு தமிழிசையை நியமித்தது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக வேட்பாளராக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.

சமூக வலைத்தளங்கள் வளர்ந்துவிட்ட நவீன அரசியல் களத்தில் மீம்ஸ்களால் அதிகம் கிண்டலக்கப்பட்ட அரசியல் தலைவராக தமிழிசை இருந்தாலும் சோதனைகளை எதிர்கொண்டு பாஜகவை தமிழகத்தில் மலரச் செய்வோம் என சூளுரைத்தது தனி கவனம் பெற்றது.

இந்நிலையில்தான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில முதல் பெண் ஆளுநர் ஆக முதல் முறையாக நியமன செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே