இந்தியாவில் மொபைல் போன்களின் எண்ணிக்கையை 11 இலக்கங்களாக உயர்த்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப ஏற்கெனவே 1993 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் 75 கோடி இணைப்புக்களின் இலக்கங்கள் உயர்த்தப்பட்டன.
அவற்றில் 45 கோடி எண்கள் செல்லுலார் இணைப்புகளாகவும் 3 கோடி எண்கள் லேண்ட்லைன் இணைப்புக்களாகவும் இருந்தன. 9, 8, மற்றும் 7 ஆகிய எண்களில் தொடங்கும் மொபைல் போன்கள் 2 ஆயிரத்து 100 கோடி இணைப்புக்களுக்கு மட்டுமே உதவும்.
2050-ல் மேலும், 2 ஆயிரத்து 600 கோடி புதிய இணைப்புக்களுக்கான தேவை எழக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தற்போது கிடைக்கும் இணைப்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மொபைல் போன்களின் இணைப்புக்களுக்கு 10.ல் இருந்த எண்களின் இலக்கங்களை 11 ஆக அதிகரிப்பது குறித்து டிராய் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், லேண்ட் லைன் எண்களை 10 இலக்கங்களாகவும், இணையத்துக்காக மட்டும் டாங்கில் போன்றவற்றை பயன்படுத்தும் எண்களை 13 இலக்க வரிசை எண்களாகவும் மாற்றக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இது 3, 5 மற்றும் 6 எனத் தொடங்கும் எண்களில் மேலும் பல இணைப்புக்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.