போலி கணக்கு காட்டி, லட்சக்கணக்கில் பணம் கையாடல்

சென்னையில் போலி கணக்கு காட்டி, லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்த  அப்பல்லோ மருந்தகத்தின் முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சொந்தமாக 5 மருந்தகங்கள் உள்ளன. இதன் சூப்பர்வைசராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கண்காணிப்பின் கீழ் எழும்பூர் சாலையில் உள்ள மருந்தகத்தை வேலூரை சேர்ந்த முகமது இஷாக் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் கவனித்து வந்தார்.

இந்நிலையில், மருந்தகத்தில்  பொறுப்பாளராக இஷாக் பணியாற்றிய கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், ரசீது ஏதுவும் போடாமல் வாடிக்கையாளர்களுக்கு மருந்து பொருட்களை விற்று, 4 லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, மருந்துகளை வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்காமல், மருந்துகளை டெலிவரி செய்தது போன்று இஷாக் கணினியில் போலி கணக்கு காட்டி, அவற்றை வெளியே விற்றதோடு, வசூல் பணத்திலும் முறைகேடு செய்துள்ளார்.

அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் வேலைக்கு வருவதை இஷாக் நிறுத்திவிட்டு தலைமறைவாகவும் இருந்துள்ளார்.

இதுகுறித்து மருந்தகத்தின் சூப்பர்வைசர் கிருஷ்ணன், எழும்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்த நிலையில்,  தலைமறைவாக இருந்த இஷாக்கை போலீசார் கைது செய்தனர்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே