பயிற்சி அளித்து செல்போன்களைத் திருடிய பலே கில்லாடி

சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தைப் போல், ஊழியர்களை  அமர்த்தி செல்போன் திருட பயிற்சி அளித்து, வாரவிடுமுறை, முன் பணம் கொடுத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய ஆந்திர கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கும்பலுக்கு தலைவன் ரவி. இவர் நடத்தி வந்தது கேக்ரான் மேக்ரான் போன்ற டுபாக்கூர் கம்பெனி அல்ல, திட்டமிட்டு பயற்சி கொடுத்து திருடும் திருட்டு கம்பெனி.

சென்னையில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபடும் நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அதன்படி பூக்கடை பகுதியில் இரு தினங்களுக்கு முன்பாக சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த ஆந்திராவைச் சேர்ந்த நபரை, செல்போன் திருடன் என உறுதி செய்த போலீசார், அவனை விட்டுப்பிடித்து ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க முடிவு செய்து தொடர்ந்து கண்காணித்தனர்.

இரண்டு காவலர்கள் அவனைப் பின்தொடர்ந்துள்ளனர். சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டில் தன் கையில் இருக்கும் திருட்டு செல்போன்களை ஒருவரிடம் ஒப்படைக்கும் போது கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர். வீட்டை சோதனை செய்ததில் வீடு முழுவதும் நூற்றுக்கணக்கான செல்போன்கள் இருந்தன.

அந்த வீட்டிற்கு ஒவ்வொருவராக வந்த திருட்டு கும்பலைச் சேர்ந்த 10 பேரை போலீசார் காத்திருந்து கைது செய்தனர்.

இவர்கள் 10 பேரும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஆட்டோ நகர் எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், சோழவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரவி, நானி, ராகுல், ஏசு, துர்கா, சாயி, ஸ்ரீனு, ராகேஷ், ஆலா மகேஷ், பிண்டி வெங்கடேஷ், பிண்டி ராஜூ ஆகிய அந்த 10 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ரவி தலைமையில் இந்த 10 பேர் கொண்ட கும்பல் சென்னை முழுவதும் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

செல்போன் திருடுவதற்கென தனது ஊரைச் சேர்ந்த இளைஞர்களை அழைத்து வந்து பயிற்சி அளித்து கார்ப்பரேட் நிறுவனம் போல் நடத்தி வந்துள்ளான் ரவி.

திருட்டு தொழிலில் ஈடுபடுவது எப்படியென ஆறு மாதம் பயிற்சி அளித்துள்ளான்.

  • குறிப்பாக கூட்ட நெரிசலில் நின்று கொண்டு தெலுங்கு செய்தித்தாள் படித்துக் கொண்டே செல்போன் திருடுவது ஒரு பாணி,
  • கைக்குட்டையை உதறி தோள் மீது போடுவது போல் அருகில் இருப்பவரின் செல்போனை திருடுவது ஒரு பாணி என

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து நபர்களை திசை திருப்பி செல்போன்களை திருடுவது போன்று பயிற்சி முறைகளை இந்தக் கும்பலுக்கு ரவி அளித்துள்ளான்.

திங்கள் முதல் வெள்ளி வரை கும்பல், கும்பலாகப் பிரித்து திருட அனுப்பி வைக்கும் ரவி, வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து விடுவான்.

மேலும், இத்தனை செல்போன்களை திருட வேண்டும் என கார்ப்பரேட் நிறுவன டீம் லீடர் போல் இலக்கு நிர்ணயித்துள்ளான் ரவி.

அதிக செல்போன் திருடும் திருடர்களுக்கு போனசாக மூன்று செல்போன்களை கொடுத்து விடுவது ரவியின் வழக்கம்.

வேலை செய்வதற்கு முன்பாகவே சம்பளத்தைக் கொடுத்து திருடச் சொல்வது இந்த செல்போன் திருட்டு நிறுவனத்தின் கொள்கை என ரவி வாக்குமூலம் அளித்துள்ளான்.

குறைந்த பட்சம் வாரம் 50 செல்போன்கள் என கடந்த இரண்டு வருடங்களில் 5,000க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடி இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருடிய செல்போன்கள் அனைத்தும் கும்பல் தலைவன் ரவி சேகரித்து வைத்து ஆந்திராவில் மாதந்தோறும் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளான். கைது செய்யப்பட்ட அந்த கும்பலிடம் இருந்து தற்போது 40 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களை வைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் தற்போது யானைகவுனி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள 40 செல்போன்கள், கடந்த வாரத்தில் திருடப்பட்டவை என போலீசார் கூறியுள்ளனர். 

வேலைக்கு ஆட்களை அமர்த்தி, திட்டம் போட்டு திருடுற கூட்டத்திடம் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே