திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில், சூரபத்மனை சுப்பிரமணியர் வதம் செய்யும் காட்சியை லட்சக்கணக்கானோர் தரிசித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும்.
இதன் முக்கிய நிகழ்ச்சியாக, சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
முதலில் யானை முகத்துடனும், அடுத்து சிங்கமுகத்துடனும் இறுதியாக சுயரூபத்திலும் வந்த சூரனை வேல் கொண்டு ஜெயந்திநாதர் வதம் செய்தபோது, கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் விண்ணதிர கோஷமிட்டனர்.
மாமரமும், சேவலுமாக உருமாறிய சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் சுவாமி ஆட்கொண்டார்.
சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் மனிதத் தலைகளாக காணப்பட்டன.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் குவிந்தனர்.
பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 3500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.