தமிழக காவல்துறையில் 350 கோடி மெகா ஊழல்- மு.க.ஸ்டாலின்

காவல்துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதல் டெண்டரில் 350 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே 88 கோடி ரூபாயை வாக்கி டாக்கி ஊழல் தொடர்பாக உள்துறைச் செயலாளரே 11 விதி மீறல்களை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தொழில் நுட்பப் பிரிவு எஸ்.பி. அன்புச்செழியன், முன்னாள் டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரனின் உத்தரவுக்கு மட்டுமே செவி சாய்த்து, கொள்முதல் டெண்டர்களை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெண்டர்களில் வி-லிங் என்ற கம்பெனிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு டிஜிட்டல் மொபைல் ரேடியோவிற்கான 16 மாவட்ட டெண்டர்களில், 10 மாவட்ட டெண்டர்கள் அந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் என்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், காவல்துறை தொடர்புடைய இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறைப்படி நியாயமாக விசாரிக்கவும் உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே