எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியலை கைவிட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனாவால் மேலும் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1520 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இறந்தால் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 47, 710 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 6, 109 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 303 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரேபிட் டெஸ்ட் மூலம் தமிழகத்தில் சமூகத்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமே பாராட்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 411 லிருந்து 457 ஆக அதிகரித்துள்ளது.
மலிவான அரசியலை ஸ்டாலின் கைவிட வேண்டும். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. எதிர்கட்சி தலைவர் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.