தமிழகத்தில் மேலும் பலருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்று மருத்துவமனை டீன் கே.வனிதா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 19 பேருக்கு டெங்குக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதா?? என்று பரிசோதனை நடந்து வருகிறது.காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனுக்கு அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பொருட்டு 45 சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனைவருக்கும் நில வேம்பு கசாயம் அளிக்க மாவட்ட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது

இதேபோல் விழுப்புரத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 65 புறநோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3 நாட்களில் 29 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு CELL COUNTER மூலமாக 24 மணி நேரமும் இரத்த அணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும், அனைத்து நோயாளிகளுக்கும் ORS மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளின் நீர்சத்தினை கண்காணிக்க ஹைட்ரேசன் செவிலியர் ஒருவரும் நான்கு சிறப்பு மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காய்ச்சல் குறைந்தவுடன் நோயாளிகளை 4 முதல் 5 நாட்கள் கண்காணித்து, உரிய ஆலோசனைகள் வழங்கிய பின்னரே வீட்டுக்கு அனுப்புவதாக விழுப்புரம் மருத்துவமனை மருத்துவ அதிகாரி சாந்தி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே