ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தஞ்சை பழைய பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை இடித்து சுமார் 14 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் மற்றும் கடைகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் அங்குள்ள திருவையாறு பேருந்து நிறுத்தத்தையும் இடித்து, 13 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ள நிலையில் இன்று, பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிறுத்தத்திலிருந்த மேற்கூரைகள் மற்றும் கடைகளை அகற்றும் பணி தொடங்கின.
மேலும் இப்பணிகளால் பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தஞ்சை கரந்தை பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தப்பட்டு அங்கிருந்து தஞ்சாவூர், அம்மா பேட்டை மாரியம்மன் கோவில், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பணி நடைபெற்றாலும், பழைய பேருந்து நிலையம் வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் நிலையம் அருகே காத்திருந்து பேருந்து பயணங்களை மேற்கொள்கின்றனர்.