சிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும், விடிய விடிய பிரார்த்தனைகளும், சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் இரவு குழுமியிருந்தனர். ஓம் நம சிவாய முழக்கத்துடன் அவர்கள் வழிபாடுகளை நடத்தினர்.

சென்னை மருந்தீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சியையும் அவர்கள் பார்த்து ரசித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஷ்வரர் கோவில் சிறப்பு பூஜையில், வெளிநாட்டவர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதைதொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சின்னஞ் சிறுமிகளின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

திருப்பூரில் உள்ள அவிநாசி லிங்கேஷ்வரர், சுக்ரீஷ்வரர் திருக்கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதைதொடர்ந்து இரவில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திரிபுராந்தீசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும், ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை காகிதத்தில் எழுதியவாறு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் ஆதிகும்பபேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதேபோன்று நாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில், பள்ளி மாணவிகள் தாம்பாளம், பானை மீதிருந்தவாறு பரதம் ஆடி அசத்தினர்.

மேட்டூர் அருகே உள்ள சஹஸ்ரலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, 5 கால யாக பூஜைகள் நடைபெற்றது.

இதில், நடிகர் சரவணன் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே