டி.என்.பி.எல். தொடரில் சூதாட்டமா? – பிசிசிஐ விசாரணை

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்று இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ,விஜய் சங்கர் போன்ற வீரர்கள் பங்கேற்ற டிஎன்பிஎல் தொடரானது ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், சூதாட்டம் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் அணிகளுடன் சூதாட்டத் தரகர்கள் சட்டவிரோத ஒப்பந்தம் செய்து கொண்டு, விளையாட்டைக் கட்டுப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

சூதாட்டத்திற்கு இணங்கும் வகையில் தங்களின் செல்போன் எண்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி
இருப்பதாக சில வீரர்கள் பிசிசிஐயிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இதை அடுத்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவானது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்திய அணி வீரர், ஐ.பி.எல். வீரர் மற்றும் ராஞ்சி தொடரில் விளையாடும் வீரர் என மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் அணியின் உரிமையாளர்களிடம் விசாரணை நடைபெறவில்லை என்று பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் அஜித் சிங் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே