பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட மாட்டாது – உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட மாட்டாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோத பேனர்கள் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது சுபஸ்ரீ உயிரிழப்பைச் சுட்டிக் காட்டி அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

பேனர் வைக்கக் கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு ஏன் அறிவுறுத்தக் கூடாது என்றும், அதை பிரமாண பத்திரமாக ஏன் தாக்கல் செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்த நிலையில், திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ். பாரதி, உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள்,கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், பிற கட்சியினர் சட்ட விரோதமாக வைத்த பேனர்களை அகற்றக் கோரி திமுக உயர்நீதிமன்றத்தை ஏற்கெனவே நாடி இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

சட்ட விரோத பேனர்கள் தொடர்பான  வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை திமுக முழுமையாக அமல்படுத்தி வருவதாகவும், 2017 ஜனவரியிலேயே அப்போது கட்சியின் செயல்தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், பேனர்கள் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே