கொடியேற்றத்துடன் தொடங்கிய வேளாங்கண்ணி பேராலய பெருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. இவ்விழா ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் எட்டாம் தேதி வரை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பெருவிழாவை தொடங்குவதற்கான கொடியேற்றம் வழக்கமான உற்சாகத்தோடு நடைபெற்றது.

மாலை ஆறு முப்பது மணி அளவில் பேராலய முகப்பிலிருந்து திருக்கோடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கொடி மேடையை அடைந்தது. அங்கு தஞ்சை ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் கொடியை ஏற்றி வைத்தார். மெல்ல மெல்ல அசைந்து உச்சியை நோக்கி செல்லும் போது பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மரியே வாழ்க என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு முழக்கமிட்டனர். கொடியை ஏற்றிய உடனே பேராலயத்தில் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிர்ந்ததும், அப்போது நிகழ்ந்த வான வேடிக்கையும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

இதை காண்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். அவர்களின் பாதுகாப்பிற்காக நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பேராலய விழாவின் முக்கிய நிகழ்வானஅன்னையின் திருத்தேர் பவனி வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது. மேலும் அன்னையின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ஆம் தேதி சிறப்பு திருப்பலி முடிந்து கொடி இறக்கப்பட்டு பெருவிழா நிறைவுப்பெறும்.

இதேபோல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 47ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. ஊர்வலமாக வந்த கொடியினை மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள 75 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் ஏற்றி வைத்தார்.

இந்த ஆண்டு இறைவனின் நற்கருணை பேழை மரியாள் என்ற தலைப்பில் அன்னையின் திருவிழா கொண்டாடப்படுகிறது. வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி கூட்டுத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அன்னையின் ஆடம்பர தேர்பவனியும் நடைபெறும். பின்னர் விழாவின் இறுதி நாளான 8-ஆம் தேதி கொடியை இறக்கும் நிகழ்வும் நடைபெறும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே