ஒரு புறம் பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவித்து வரும் பாக்., மறுபுறம் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவது போல இரட்டை வேடம் போடுவதாக, ஐ.நா.,பொதுச் சபையில் இந்தியா காட்டமாகத் தெரிவித்துள்ளது. பாக்., பிரதமர் இம்ரான் கானின் புளுகு மூட்டையை, இந்திய அதிகாரி சினேகா துாபே, சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி அசத்தினார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா., பொதுச் சபையின் 76வது கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாக்., பிரதமர் இம்ரான் கான் பேசும்போது, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, சையத் அலி ஷா கிலானியின் உடல் அடக்கம் உள்ளிட்டவை தொடர்பாக பேசினார். இம்ரான் கான் பேசியதாவது: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்கள் விருப்பத்தின்படி, ஜம்மு – காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கண்டால் தான், தெற்காசிய பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்படும்.பாக்., ஆதரவு பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் தலைவர் சையத் அலி ஷா கிலானியின் சடலத்தை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யும்படி, ஐ.நா., உறுப்பு நாடுகள் இந்தியாவை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக , ஐ.நா.,வில் இந்தியாவின் முதன்மை செயலராக பணியாற்றும் சினேகா துாபே பேசியதாவது:பாக்., பிரதமர் இந்தியாவின் உள் விவகாரங்களை ஐ.நா., பொதுச் சபையில் பேசி, இந்த மன்றத்தின் மாண்பை மீண்டும் குறைக்க முயற்சித்துஉள்ளார். உலக அரங்கில் தொடர்ந்து இந்தியா குறித்து பொய்ச் செய்திகளை தெரிவித்து, உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிக்க முயற்சிக்கும் பாக்.,கிற்கு பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி, விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பாக்., பிரதமரின் இத்தகைய கருத்துக்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த கண்டனத்திற்கும் உரியவை. மீண்டும் மீண்டும் பொய் பேசி வரும் இந்த மனிதரின் மன நிலையை பார்க்க பரிதாபமாக உள்ளது.

இந்த சபையில் உண்மை நிலையை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் என பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் என்ற தீயை அணைக்கும் போர்வையில், பயங்கரவாத தீயை துாண்டும் நாடாக பாக்., இரட்டை வேடம் போடுகிறது.அண்டை நாடுகளுக்கு மட்டும் தொல்லை கொடுப்பர் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை பாக்., வளர்த்து வருகிறது. பாக்.,கின் கொள்கைகளால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்படுகிறது.

மறுபுறம், பாக்., உள்நாட்டு மதவெறி வன்முறையை, பயங்கரவாதச் செயல்கள் எனக் கூறி, மூடி மறைக்க முயற்சிக்கிறது.பிரிக்க முடியாது ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள், இன்றும் என்றும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதிகளாக தொடர்ந்து இருக்கும். இதில், பாக்., சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் அடங்கும். அங்கு சட்ட விரோதமாக பாக்., ஆக்கிரமித்து உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.பாக்., பிரதமர், இந்தியாவுக்கு எதிரான பொய் பிரசாரத்திற்கு ஐ.நா., சபையை தவறாக பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. இது போன்ற பிரசாரங்களால், தான் ஒரு பயங்கரவாத ஆதரவு நாடு என்ற பழியில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்ப பாக்., முயற்சிக்கிறது.

ஆனால் அந்த முயற்சி ஒவ்வொன்றும் வீணாகிப் போவது தான் பரிதாபம். பாகிஸ்தானில் சாதாரண மக்கள், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் அச்சத்துடன் வாழும் நிலையில், பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்; இது, உலகிற்கு நன்கு தெரியும். அமெரிக்காவில் பயங்கரவாதிகளால் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு பாக்., அடைக்கலம் அளித்ததை, இந்த உலகம் என்றுமே மறக்காது.

ஆனால் இன்று கூட பாக்., பிரதமர் இம்ரான் கான், ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்கிறார். பாக்., பிரதமர் இன்றும் பயங்கரவாத செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. நவீன உலகில் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்துவதை ஏற்கவே முடியாது.பாக்., உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் இயல்பான உறவுகளைப் பின்பற்றவே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாக்.,கிடம் தான் உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை பாக்., எந்த வகையிலும் ஊக்குவிக்கக் கூடாது. பாக்., அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த முடியாதபடி உறுதியான, நம்பகத்தன்மையுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வெளிப்படையாக பயங்கரவாதிகளை ஆதரிப்பது, அடைக்கலம் கொடுப்பது, பயிற்சி அளிப்பது, நிதியுதவி செய்வது, ஆயுதங்கள் வழங்குவது ஆகிய பாகிஸ்தானின் அனைத்து செயல்களையும் உலக நாடுகள் அறிந்துள்ளன. இதைத் தான் பாக்., கொள்கையாக பின்பற்றி வருகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தடை செய்த ஏராளமான பயங்கரவாதிகளுக்கு, பாக்., அடைக்கலம் கொடுத்துள்ளது.

பாக்.,கின் பயங்கரவாத ஆதரவுக் கொள்கைகளை ஐ.நா., உறுப்பு நாடுகளும் நன்கு அறிந்துள்ளன. பாக்.,கிற்கு சொந்த மக்களையே கலாசார இனப் படுகொலை செய்த மோசமான சரித்திர பின்னணியும் உண்டு. அதன் விளைவாக வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும், பாக்., இன்றும் தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்ச பொறுப்பைக் கூட ஏற்கவில்லை.அச்சம்பாகிஸ்தானில் சீக்கியர்கள், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் உரிமைகள், அரசு ஆதரவுடன் நசுக்கப்படுகின்றன; இது, யூத எதிர்ப்பு ஆட்சியையும், அதை நியாயப்படுத்திய அரசையும் நினைவூட்டுகிறது.பாக்.,கில் நீதிக்கு குரல் கொடுப்போர் ஒடுக்கப்படுகின்றனர்; அத்தகையோர் கடத்தப்பட்டு காணாமல் போவதும், நீதிக்குப் புறம்பான கொலைகளை நியாயப்படுத்துவதும் இன்றும் நடக்கிறது.பாக்., போலன்றி இந்தியா சிறுபான்மை மக்களுடன் பன்முகத் தன்மையுள்ள ஜனநாயக நாடாக விளங்குகிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முப்படை தலைமை தளபதிகள் என, மிக உயர்ந்த பொறுப்புகளுக்கு சிறுபான்மையினரால் வர முடிகிறது. மேலும், இந்தியாவில் பத்திரிகைகளும், நீதித் துறையும் சுதந்திரமாக செயல்படுகின்றன. அவை, அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து, அரசியல் சாசன உரிமைகளை பாதுகாக்கின்றன.ஆனால் பாக்.,கிற்கு பன்முகத் தன்மை கொள்கையை புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும்.

ஏனெனில், அந்நாட்டு அரசியல் சாசனம், சிறுபான்மையினர் அரசின் உயர் பொறுப்புகளில் வருவதை தடுக்கிறது. இத்தகைய நிலையில் உள்ள பாக்., இந்தியா மீது பொய்க் குற்றஞ்சாட்டி உலக அரங்கில் கேலிக்கு ஆளாவதற்கு முன், குறைந்தபட்சம் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.யார் சினேகா துாபே?கோவாவைச் சேர்ந்த சினேகா துாபே, புனே பெர்குசன் கல்லுாரியில் எம்.ஏ., முடித்து, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் எம்.பில்., பட்டம் பெற்றவர். கடந்த 2012ல், சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, ஐ.எப்.எஸ்., ஆக தேர்வானார்.

வெளியுறவு துறை அமைச்சகத்தில் பணியாற்றிய சினேகா துாபே, 2014ல், ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டில், இந்திய துாதரகத்தின் மூன்றாம் நிலை செயலராக நியமிக்கப் பட்டார். அதன் பின் ஐ.நா.,வில் இந்தியாவின் முதன்மைச் செயலராக பொறுப்பேற்றார். சினேகா துாபே தான், அவர் குடும்பத்தின் முதல் சிவில் சர்வீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா., பொதுச் சபையில் பாக்., பிரதமர் இம்ரான்கானை விளாசித் தள்ளிய இவரது பேச்சு, உலகளாவிய ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் பலத்த பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே