கிருஷ்ணா நதிக்கரையோரம் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது

ஆந்திர மாநிலம், அமராவதியில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கியிருக்கும் வீட்டை இடிக்கக்கோரி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரையோரப் பகுதி சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள வீடுகளை இடிக்கக்கோரி ஆந்திர பிரதேச தலைநகர மேம்பாட்டு வாரியத்தால் அந்த வீடு, விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதால் 7 நாள்களுக்குள் இடிக்க வேண்டுமென்றும், இல்லையெனில் அதை தாங்களே இடிக்க நேரிடும் என்றும் லிங்கமனேனி ரமேஷுக்கு ஆந்திர பிரதேச தலைநகர் மேம்பாட்டு வாரியம் கடந்த 19ஆம் தேதி இறுதி எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், அப்பகுதியில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

விதிகளுக்கு புறம்பாக 24 வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் 5 வீடுகளின் உரிமையாளர்கள், நோட்டீஸுக்கு அளித்த விளக்கத்தில் திருப்தியில்லாததால் அவற்றை இடிப்பதற்கான உத்தரவு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எஞ்சிய வீடுகளின் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் ஆய்வு செய்யப்பட்டபிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக, ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தபிறகு, சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட பிரஜா வேதிகா எனும் கட்டிடம் கடந்த ஜூன் மாதம் இடிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே