காஷ்மீரில் பதுங்கியிருந்த 8 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கைது

காஷ்மீரில் சிறப்புப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயன்று வருகிறது. இதனை இந்திய ராணுவம் எதிர்கொண்டு முறியடித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக போராடும்படி மக்களைத் தூண்டி விட்டதாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 8 தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த இஜாஸ் மிர், உமர் மிர், தவ்ஸிப் நிஜார், இம்தியாஸ் நிஜார், ஒமர் அக்பர் (Aijaz Mir, Omar Mir, Tawseef Najar, Imitiyaz Najar, Omar Akbar) உள்பட 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பெரும்பாலும் ராணுவத்துடன் சண்டையிட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது 8 பேர் பிடிபட்டிருப்பது ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

அப்போது ஜமாத் இ இஸ்லாமி என்ற தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவத் தயார் நிலையில் இருந்தனர்.

இதனையறிந்த இந்திய ராணுவம் லீப்பா பள்ளத்தாக்கில் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் ராவாலாகோட் மற்றும் போத்தி பாலா ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே