காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தா..? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை இந்த ஆண்டு ரத்து செய்யப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அதனை மறுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றுவரும் காலாண்டுத் தேர்வுகள் வருகிற இருபத்தி மூன்றாம் தேதி முடிவடையவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்தபடி காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை ரத்து செய்யப்படவுள்ளதாகவும், விடுமுறை நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல தகவல் பரவிவந்தது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என தெரிவித்துள்ளது. காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது.

காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்திக்கொள்ளலாம் எனவும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே