சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இளம் பெண்கள் அதிகம் பேர் கிரிக்கெட் போட்டியை விரும்பி பார்த்தாலும், அவர்களில் பலரை அதனை ஆர்வத்துடன் விளையாட வைத்த பெருமைக்குரியவர் மித்தாலி ராஜ். இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவத்தை கொண்ட மித்தாலி ராஜ், ஒட்டு மொத்த கிரிக்கெட் வரலாற்றில் அளவரிய சாதனைகளை படைத்து இருக்கிறார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணியை பலமுறை வழிநடத்தி இருக்கும் மிதாலி ராஜ் இதுவரை 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதங்களுடன் 6720 ரன்களும், 81 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2364 ரன்களும் எடுத்து இருக்கிறார். டி20 போட்டியை பொருத்தவரை பங்கேற்ற 89 போட்டிகளில் இந்திய அணியை 32 டி20 போட்டிகளில் வழிநடத்தி இருக்கிறார்.
இதில் முக்கியமாக மூன்று உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் 2006-ஆம் ஆண்டு முதன்முறையாக மகளிர் டி20 போட்டி அறிமுகமானபோது கேப்டனாக பதவி வகித்த பெருமை இவரையே சேரும்.
கடந்த சில மாதங்களாக டி20 போட்டிகளில் மெதுவாக ரன் சேர்கிறார் என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருக்கிறார் மித்தாலி ராஜ். ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும், இறுதியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்பதற்கு மிதாலி ராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் இருந்து விலகினாலும் 50ஓவர் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன் என தெரிவித்திருக்கும் மித்தாலி ராஜ், 2021 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக தான் முழுவதும் தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இந்திய மகளிர் அணியின் ஜாம்பவானான மித்தாலி ராஜ்-இன் கிரிக்கெட் பயணம் இளம் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த பாடம் என்பதுடன் வரும் காலகட்டத்தில் இந்திய அணிக்காக அவர் ஆற்றிய பங்கு என்றும் நினைவில் மலரும் அற்புத சாம்ராஜ்யமாக இருக்கும் என்று நம்புவோம்.