கோவிட் 19 – சமூகத் தொற்றின் தொடக்கப் புள்ளி ஆகிறதா சென்னை ?

S.ஜீவபாரதி, தமிழில் திருமாறன். Jc

கடந்த மே 14ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவியான ஸ்வாதி பிரபாகரன் என்பவர் ட்விட்டரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் தாயார் மற்றும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து சிகிச்சைக்கான போதிய உதவிகள் கிடைக்கவில்லை என்று செய்தி வெளியிட்டு இருந்தார். இந்தச் செய்தி சமூக ஊடங்களில் வேகமாக பரவத் தொடங்கியது. அவர் அதில் அரசுத் தரப்பினரால் தன் தாயாருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை முடிவு செய்ய முடியாமல் போனதற்கான காரணங்களை சொல்லி இருந்தார்.

இந்தச் செய்தி பரவிக்கொண்டு இருந்த அதே நாளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. விஜய பாஸ்கர் அவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக மூன்று லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார். தமிழகத்தில் கடந்த பத்து நாட்களில் முதல் நிலைத்தொற்றாளர்கள் (Primary Contacts) யாரும் அடையாளம் காணப்படவில்லை என மக்கள் நல்வாழ்துறை வட்டாரங்களும் அறிவித்து இருந்தனர்.

முதல் நிலைத்தொற்றாளர்கள் என்போர் முதலில் நோய்த்தொற்றுக்கு உள்ளானோர் ஆவர். அவர்கள் மூலமாகவே மாநிலத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் பரவுகிறது. முதல்நிலைத் தொற்றாளர்களுக்கு பல வழிகளில் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என்றும், சமூகப் பரவல் ஏற்படாமல் இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்திய அரசு எடுத்திருப்பதாக அரசுத் தரப்பில் தெருவிக்கப்பட்டு இருந்தது.

அரசுத் தரப்பை பொறுத்தவரை முதல் நிலைத்தொற்றாளர்கள் என்போர் வெளி நாடுகளில் இருந்து நோய்த் தொற்று ஏற்பட்டு இந்தியாவிற்கு வந்தவர்கள் அல்லது அவர்கள் மூலமாக நோய்த்தொற்றுக்கு உள்ளான நபர்களே ஆவர். அப்படி பார்க்கும் போது முதல் நிலைத்தொற்றாளறான ஸ்வாதி பிரபாகரனின் தாயார் மேற்கண்ட முறையில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகவில்லை. அப்படியானால் அரசின் தகவலுக்கு மாற்றாக சமூகத்தொற்று தொடங்கி விட்டது என்றே கருத வேண்டி உள்ளது.

அதேபோல் மருத்துவர் ராம்குமார் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்கள் வெளிநாட்டிற்கோ, வெளியிடங்களுக்கோ செல்லவில்லை என்று கூறி உள்ளார். மேலும் வீட்டில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற யாருக்கும் நோய்த்தொற்று இருக்கிறதா என சுகாதாரத்துறையினர் சோதனை செய்யவில்லை என்றும் கூறி உள்ளார்.

இதில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒரு பிரிவினரான கடைநிலை ஊழியர்களுக்கு இதைப்பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. சமூக ஊடகங்கள் மூலம் இதனைபற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒவ்வொரு பணிச்சுற்றின் முடிவிலும் ஏழு நாட்கள் தனிமையில் இருக்கும்படி அரறிவுறுத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் கடைநிலை ஊழியர்கள் எவ்வித விடுப்பும் இன்றி தெருக்களில் பணியில் உள்ளனர்.

மே 15 ம் தேதி கொரோனா தொற்று ஏற்படும் கடைநிலை ஊழியர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால் சென்னையில் நோய்த்தொற்றுக்கு உள்ளான பணியாளர்களுக்கு எந்த மண்டலங்களிலும் உதவித் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வீடு வீடாகச் சென்று விவரங்களை பெற நூற்றுக்கணக்கான தற்காலிகத் ஊழியர்கள் சென்னை மாநகராட்சியால் பல நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப் பட்டனர். அதில் கொரோனா தொற்று ஏற்பட்ட பலரில் ஒரு பெண் பணியாளர் கூறும் போது, தனிமைப்படுத்தப்பட்ட எங்களுக்கு மாநகராட்சி நிர்வாகமோ, பணியமர்த்திய நிறுவனங்களோ எந்த வித உதவியும் செய்யவில்லை என்றார். நான் மே மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்தேன். தெருக்களில் குப்பை அகற்றும் பணியில் இருந்தேன். எந்த வீட்டிற்குள்ளும் சென்றதில்லை. எப்படி தொற்று ஏற்பட்டது எனவும் தெரியவில்லை என்கிறார். எங்களுக்கு தினமும் 372 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு இந்த தொகையைக் கொண்டு தினசரி வாழ்க்கையை சமாளிப்பது பெரும் கஷ்டமாக உள்ளது.மாநகராட்சியில் இருந்து எந்த உதவியும் அளிக்கவில்லை. அரசு இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

ஏப்ரல் 4ம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணியில் உள்ள சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த பல தற்காலிக பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் திரு.வி.க நகர் மண்டலத்தில் உள்ள ஒரு வார்டில் மட்டும் அதிகபட்சமாக 45 தற்காலிக பணியார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு வார்டில் 13 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கூறுகையில் ஏப்ரல் 4ம் தேதி முதல் பணியில் இருக்கிறோம். ஆரம்பத்தில் சாதாரண மாஸ்க், துணி, கையுறை வழங்கினார்.மூன்று வாரங்கள் கழித்து எங்களில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டது. சிறிது நாட்களில் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. எப்படி ஏற்பட்டது என்று யாருக்குமே தெரியவில்லை என்று கூறியுள்ளார். மாநகராட்சியில் இருந்து எந்த உதவியும் எங்களுக்கு செய்ய வில்லை. சம்பளம் கூட இன்னும் சரியாக வழங்கப்படவில்லை என்றார். நோயால் பாதிக்கப்பட்ட இது போன்ற பணியாளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் நீக்கி விட்டதாகத் தெரிகிறது. ஆரம்ப கட்டத்தில் தொற்று ஏற்பட்டவர்களை கண்டுபிடிக்க உதவியதே நாங்கள்தான். ஆனால் எங்கள் பெயர்கள் பணியாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எங்களுக்கு ஒரு மாத சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்று மேலும் அவர் தெரிவித்தார்.

கோயம்பேடு மார்க்கெட் மூலமே தொற்று அதிகரித்ததாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது . மே 13ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறும் போது, நோயைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சந்தைக்கு வெளியே இருந்த வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றார்.

ஆனால் கோயம்பேடு சந்தையில் நீண்ட காலமாக வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி கூறியத் தகவல் முதல்வர்

கூறியதற்கு முரணாக இருந்தது. இங்கு 4000 பதிவு பெற்ற வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர வெளியே இருக்கும் வியாபாரிகளை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றார். மேலும் பலர் கூறுகையில், அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் இதைப் பற்றி பேசியபோது அவர்கள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை என்றார். நடக்கும் பல விஷயங்களைப் பார்க்கும் போது சமூகத்தொற்று ஏற்படுவதற்கான அபாயகரமான பல வழிகள் இருப்பதை அறிய முடிகிறது என நோயியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைபாளரும், முன்னாள் பேராசிரியருமான மருத்துவர் சுந்தரராமன் தமிழ்நாடு அரசாங்கம் இரு தவறுகள் செய்து விட்டதாகக் கூறுகிறார். ஒன்று, ஆரம்ப கட்டத்தில் நோயுடன் தொடர்புடையவர்களின் விவரங்களை சேகரிக்காமல் விட்டது. இப்போது பரவாயில்லை. தகவல்கள் சேகரிக்கப் படுகிறது. இரண்டாவது ஊரடங்கு நீட்டிப்பு என்பது சமூகத்தொற்றை தடுக்கவே செய்யப்பட்டது. ஆனால் நடந்தவைகள் வேறு. அதற்குப் பிறகுதான் நோய்ப்பரவல் அதிகம் ஆகியது. பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குதல் என்பது இன்னொரு பிரச்சினையாக உள்ளது. மனிதர்கள் நோய்ப் பரப்பும் காரணிகள் அல்ல. சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அவர்கள். அரசாங்கம் மக்களிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விட்டது. இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது காவல் துறையினரின் பணிகள் அல்ல என்றார்

Jeeva Bharathi தமிழில் Thirumaran

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 399 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே