பொருளாதார மந்த நிலையால், நேற்று ஒரு நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு

பொருளாதார மந்த நிலையால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 97 காசுகள் குறைந்து 72 ரூபாய் 56 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக மும்பை பங்கு சந்தை 770 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 225 புள்ளிகளும் நேற்று ஒரே நாளில் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 11 மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது எனவும், இதன் காரணமாக பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணியாக அமெரிக்கா சீனா இடையே நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார நிலையே காரணம் என கூறப்படுகிறது.

மும்பை பங்குசந்தையில் எரிசக்தி, தொலைதொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர். சர்வதேச பொருளாதார சூழல் மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்தின் சரிவும் பங்கு சந்தையின் வீழ்ச்சிக்கு காரணம் என முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் உற்பத்தித் துறையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிந்துள்ளது, இது முதலீட்டாளர்கள் இடையே நம்பகமான சூழலை உருவாக்கவில்லை என கருதுகின்றனர்.

மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளும், சரிவை சந்திக்க காரணமாக அமைந்துள்ளதாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே