அர்மீனியா, நியூசிலாந்து, பெல்ஜியம் பிரதமர்களுடன் மோடி சந்திப்பு

அர்மீனிய நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, ஐநா பொதுசபை கூட்டத்திற்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதில் அவர் அர்மீனியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் பிரதமர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யனுடனான சந்திப்பின் போது, இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், மருந்துகள், சுற்றுலா உள்ள துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கு இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாகவும் மோடி கூறினார்.

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வர்த்தக ஏற்பாட்டை நிறைவு செய்ய ஆர்மீனியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது மோடியை அர்மீனியாவுக்கு வரும்படி அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும், அதனை மோடி ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன், பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரையும் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே