அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கான பணபலன்கள்

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதிய பணபயனுக்கான காசோலைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள், தங்களுக்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்காததை சுட்டிக்காட்டி அவ்வப்போது போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, கடந்த 2018 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2019 மார்ச் 31 வரை ஓய்வு பெற்ற 6 ஆயிரத்து 283 ஊழியர்களுக்கான, ஓய்வூதிய பணபலன்களுக்கு ஆயிரத்து 93 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் பணபலன்களை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது.

அதில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பணபலன்களுக்கான காசோலைகளை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கினார்.

அதில் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 521 பேருக்கு 125.55 கோடி ரூபாயும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 346 பேருக்கு 63.38 கோடி ரூபாயும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 823 பேருக்கு 130.26 கோடி ரூபாயும் என மொத்தமாக ஆயிரத்து 690 பேருக்கு 319.19 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் ஓய்வுபெற்றவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைப்பெற்று வருவதாகவும், அவர்களுக்கும் விரைவில் பணபலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே