குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி : 13 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கடையநல்லூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 13 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், குடியுரிமை திருத்தச்சட்ட சட்டத்தை  திரும்பபெற வலியுறுத்தி ஐக்கிய ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இதில் பெண்கள் உட்பட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கடையநல்லூர் ரஹ்மானியாபுரத்தில் தொடங்கிய இந்தப் பேரணியில் மிகப்பெரிய தேசிய கொடியை ஏந்தியவாறு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.  

கைகளில் பதாகைகளை ஏந்தியும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடியும் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

இறுதியாக காயிதே மில்லத் தெருவில் இந்தப் பேரணி நிறைவடைந்தது.

அமைதியாக நடைபெற்ற இந்தப் பேரணியின் போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பேரணி அனுமதி இல்லாமல் நடைபெற்றதால், இதில் கலந்து கொண்ட பெண்கள் உள்ளிட்ட 13 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே