அமலாக்கத்துறை முன் ஆஜராக அனுமதி கோரிய ப.சிதம்பரம் மனு தள்ளுபடி

அமலாக்கத் துறை முன் ஆஜராக அனுமதி கோரிய ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பாக தானே சரண் அடைவதற்கு தயாராக இருக்கிறேன், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடந்து முடிந்த சூழ்நிலையில் தற்போது அதன் மீதான உத்தரவை சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய்குமார் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனவும், வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலிலேயே திஹார் சிறையில் இருக்க வேண்டும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் வழங்கி இருக்கிறார்கள்.

சிதம்பரம் அவர்கள் ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக, விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் 15 நாட்களுக்கு பிறகு நீதிமன்ற காவலுக்கு திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கும் பட்சத்தில் தன்னால் திஹார் சிறைக்கு செல்ல முடியாது அதற்கு பதிலாக தான் அமலாக்கத்துறை இடம் விசாரணைக்காக சரணடையத் தயாராக இருக்கிறேன் என்ற ஒரு சிறப்பு மனுவை சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பானது தாக்கல் செய்தது.

அந்த மனுவின் மீதான உத்தரவைத்தான் தற்போது பிறப்பித்து இருக்கிறார்கள். அதாவது தேவையான நேரத்தில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனவும், சரணடைய தேவை இல்லை என்று அமலாக்கத்துறை வாதிட்டது.

அந்த வாதங்களை ஏற்று தான் இந்த உத்தரவை நீதிபதி அஜய்குமார் வழங்கி இருக்கிறார்கள்.

அமலாக்கத்துறையை பொறுத்த அளவில் சிதம்பரத்தால், தான் எந்த நேரத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று எந்த ஒரு தேதியையும் குறிப்பிட முடியாது எனவும், தேவைப்படும் நேரத்தில் அமலாக்கத்துறை அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கும் என்ற ஒரு கருத்தினை அமலாக்கத் துறையானது நேற்று விசாரணையின்போது கூறியது குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் தான் இன்றைய தீர்ப்பானது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே