புரட்சி போல வாழ்ந்தீர்கள்’ – எஸ்.பி.ஜனநாதன் குறித்து ஸ்ருதி ஹாசன் உருக்கம்!

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அதற்காக தேசிய விருதும் பெற்றவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அதைத் தொடர்ந்து ’ஈ’, ’பேராண்மை’, ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என பல்வேறு சமூக பிரச்னைகளை மையப்படுத்திய படங்களை இயக்கினார்.

தற்போது அவர் ‘லாபம்’ என்ற படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2 நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது, அவருக்கு வயது 61. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லாபம் படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாசன், ”கனத்த இதயத்தோடு எஸ்.பி.ஜனநாதன் சாருக்கு விடை தருகிறோம். உங்களைப் பற்றி அறிந்துக் கொண்டதும் உங்களுடன் பணியாற்றியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! ஒவ்வொரு நாளும் ஒரு புரட்சி போல உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள், உங்கள் வழிகளில் நீங்கள் ஊக்கமளிப்பவராகவும், தயவானவராகவும் இருந்தீர்கள். அனைத்திற்கும் நன்றி. நீங்கள் எப்போதும் என் எண்ணங்களில் இருப்பீர்கள். அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே