மாஸ்டர் ரிலீசுக்குப் பின் மீண்டும் கவலையில் தியேட்டர் உரிமையாளர்கள்

கடந்த மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படம் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் வசூல் வேட்டை நடத்தி அசத்தியது. 50 சதவிகித இருக்கை அனுமதியுடன் வெளியான மாஸ்டர் படம் உலகளவில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிரட்டியது.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் நீங்கி விட்டதாகவும் திரையரங்குகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் திரையுலகினர் உற்சாகம் அடைய தொடங்கினர். ஆனால் இந்த உற்சாகம் வெகுநாள் நீடிக்கவில்லை என்பதே சோகம்.

ஆம். மாஸ்டருக்கு பின் தமிழில் கபடதாரி, களத்தில் சந்திப்போம், பாரிஸ் ஜெயராஜ், சக்ரா, கமலி ஃப்ரம் நடுகாவேரி என 10-க்கும் மேற்பட்ட புதிய படங்கள் வெளிவந்த நிலையில் அதில் ஒரு படம் கூட வெற்றி பெறாதது திரையுலகை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது. இத்தனைக்கும் இந்தப் படங்கள் 100 சதவிகித இருக்கை அனுமதியுடன் வெளியான போதிலும் பல காட்சிகளுக்கு 10 பேர் கூட வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சோகமும் அரங்கேறியது.

இதில் களத்தில் சந்திப்போம், பாரிஸ் ஜெயராஜ், கமலி ஃப்ரம் நடுகாவேரி ஆகிய படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதிலும் போதிய விளம்பரங்கள் இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காமல் போனதாக திரையரங்க உரிமையாளர்கள் சிலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

தமிழில் நிலைமை இப்படியிருக்க அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புதுமுகங்கள் நாயகர்களாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து வெளியான ‘உப்பெனா’ எனும் திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிரமிக்க வைத்துள்ளது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு படக்குழுவினர் ஓடி ஓடி விளம்பரம் செய்ததே காரணம் என கூறும் திரையரங்க உரிமையாளர்கள் தமிழிலும் இதுபோல் நாயகர்கள் தங்களுடைய படங்களை பெரியளவில் விளம்பரம் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.மேலும் மார்ச் இறுதியில் இருந்து சிவகார்த்திகேயனின் டாக்டர், கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் ஆகிய பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருப்பதால் இந்தப் படங்களை பெரிதும் நம்பியிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள்
‘கண்டா வர சொல்லுங்க.. பெரிய படங்களை கையோடு கூட்டி வாருங்க’ என கோரஸாக பாடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே