பிரசவத்துக்குப் பிறகு டீ காபி வேணாம். இதை குடிங்க, உடலுக்கு வலு கிடைக்கும்!

பிரசவத்துக்குப்பிறகு காஃபைன் பானங்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக தினம் ஒரு டீ என்று வலுகொடுக்கும் ஆரோக்கியமான டீ வகைகளை குடிக்கலாம்.
இயல்பாகவே உடலுக்கு காபி, டீ போன்ற பானங்களை அதிகம் எடுக்க கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு கூடுதலாக உணவு பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் டீ , காபி குடித்தே பழகிவிட்டது எப்படி திடீரென்று அதைதவிர்க்க முடியும் என்பது பலரது கேள்வியாக இருக்கலாம்.
ஆனால் ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அதை மேன்மைபடுத்தும் வகையில் தினம் ஒரு விதமான டீயை தயாரித்து குடிக்கலாம். இவை ருசியிலும் மனதை அள்ளும் உடலுக்கும் வலு கொடுக்கும். எப்போதும் அருந்தக்கூடியது.

​இஞ்சி பால் டீ
முன்னோர்கள் காலம் முதலே இது செரிமானத்துக்கு ஏற்ற பானமாக குடித்துவருகிறோம். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை குடிப்பதன் மூலம், குழந்தைக்கும் எளிதான செரிமானம் சாத்தியமாகும்.

தயாரிக்கும் முறை

இஞ்சி – சிறு துண்டு

ஏலக்காய் – 1

பசும்பால் – அரை டம்ளர் ( தேவையெனில் சேர்க்கலாம்)

நாட்டு சர்க்கரை – இனிப்புக்கேற்ப
இஞ்சியைத் தோல் சீவி நறுக்கி இடித்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து அரை டம்ளர் ஆகும் வரை சுண்டக்காய்ச்சி ஏலக்காய் தட்டி போட்டு இறக்கி வடிகட்டவும். பால் தேவையெனில் சிறிதளவு சேர்த்து இனிப்புக்கு நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம். குழந்தைக்கும் தாய்க்கும் செரிமானம், வாயு பிரச்சனை என எதுவுமே தாக்காது.

​செம்பருத்தி டீ
செம்பருத்தி பூ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடல் சோர்வு நீங்கும். பிரசவக்காலத்துக்கு பிறகு உடல் சோர்வு நீங்க ஏற்ற பானம் இது.

தயாரிக்கும் முறை

செம்பருத்தி பூ – 2

நாட்டுசர்க்கரை – இனிப்புக்கேற்ப

பால் – அரை கப் (தேவையெனில் சேர்க்கலாம்)

செம்பருத்தி பூ இதழ்களை ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். ஒரு கொதிவிட்டு இறக்கி ஆறியதும் வடிகட்டி தேவையெனில் பால், நாட்டுசர்க்கரை சேர்த்து குடிக்கவும். சுவை தெரிய வேண்டுமெனில் மிளகுத்தூள், ஏலத்தூள் சேர்க்கலாம். இனிப்பு, காரம், மணம் மூன்றும் இருக்கும்.

​புதினா எலுமிச்சை டீ
எலுமிச்சை, புதினா இரண்டுமே வைட்டமின் சி சத்து கொண்டவை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியவை. பிரசவக்காலத்துக்கு பிறகு உடலுக்கு வலுவேற்ற உதவுபவை. பக்கவிளைவுகள் இல்லாதவையும், ருசியானவையும் கூட.

தயாரிக்கும் முறை

புதினா இலைகளை சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் வெந்நீரில் போட்டு மூடிவிடவேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் புதினாவின் சாறு நீரில் இறங்கியிருக்கும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து இனிப்புக்கு தேன் சேர்த்து குடிக்கலாம்.

எலுமிச்சைசாறுக்கு மாற்றாக எலுமிச்சை தோல் பொடி சேர்க்கலாம். வைட்டமின் சி ஆரஞ்சு பழங்களில் நிறைந்திருப்பதால் இதன் தோலை பொடித்தும் சேர்க்கலாம். மணமாக இருக்கும்.

​ஆவாரம் பூ டீ
கர்ப்பக்காலத்தில் நீரீழிவு கட்டுப்படுத்த முடியாவதவர்கள், நீரிழிவு வந்தவர்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை தடுக்க இந்த ஆவாரம் பூ டீ உதவக்கூடும். பிரசவத்துக்கு பிறகு மலச்சிக்கல் வராமல் தடுக்கவும், நீரிழிவு வராமல் பாதுகாக்கவும் இவை உதவுகிறது.

தயாரிக்கும் முறை

ஆவாரம் பூ – 10 ( ஃப்ரெஷ்ஷாக கிடைத்தால் அல்லது

ஆவாரம் பூ பொடி – 1 டீஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

பனை வெல்லம் – தேவைக்கு

பால் – தேவையெனில் சேர்க்கலாம்

ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் ஆவாரம் பூ பொடி போட்டு கொதிக்க விட வேண்டும். இவை பாதியாக சுண்டும் வரை காத்திருந்து இறக்கி இனிப்புக்கு பனைவெல்லம் சேர்த்து குடிக்கலாம். பால் சேர்த்து குடித்தாலும் சுவை நன்றாக இருக்கும்.

​சுக்கு மல்லி சோம்பு டீ
சுக்கு – ஒரு துண்டு,

தனியா – 1 டீஸ்பூன்,

சோம்பு – 1 டீஸ்பூன்,

நாட்டு சர்க்கரை – இனிப்புக்கேற்ப,

ஏலக்காய் – 1

சுக்கு இடித்து அதனுடன் தனியா, சோம்பு அனைத்தையும் மிக்ஸியில் இட்டு அரைக்கவும். அதனுடன் ஒன்றரை டம்ளர் நீர் விட்டு கொதிக்கவிடவும். தண்ணீர் ஒரு டம்ளராக சுண்டியதும் அதில் ஏலத்தூள், நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கவும். தனியா வாடை வராமல் இருக்க சுக்கு போதுமானதாக இருக்கும். தனியா வாடை பிடிக்காமல் இருக்க தேவையெனில் கொத்துமல்லித்தழைகளையும் சேர்க்கலாம். சோம்பு செரிமானத்துக்கு ஏற்றது. தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்தை இவை கொடுக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு செரிமானக்கோளாறுகளை உண்டாக்காது. குளுமையால் வந்த கப நோய்களை நீக்கும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
பிரசவக்காலத்துக்கு பிறகும் கர்ப்பக்காலம் போன்றே உடலுக்கு வேண்டிய சத்துகளை சிறிது காலம் எடுத்துகொள்ளவேண்டும். பிரசவக்காலத்தில் இழந்த வலுவை மீட்டெடுக்க ஊட்டச்சத்துள்ள உணவு அவசியம். இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீஷியம், வைட்டமின் சி, வைட்டமின் கே என இந்த பானங்களில் உடல் வலுபெற வேண்டிய அத்தனை சத்துகளும் உண்டு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே