கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த செல்லும் மருத்துவர்களை கண்ணீர் மல்க அவர்களது உறவினர்கள் வழியனுப்பும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போர் இதயத்தை கணக்க செய்கிறது.

கண்ணீருடன் உற்றார் உறவுகளை அனுப்பி வைக்கும் இவர்களின் பின்னால் இருக்கும் சோகம் தான் என்ன என்ற கேள்வி எழுகிறதா? இன்று விடைபெற்று செல்லும் இவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற எண்ணத்தால் வரும் கண்ணீர் தான் இது.

உலகை உருக்குலைத்து கொண்டிருக்கும் கொரோனோ வைரசின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க செல்பவர்களை தான் கண்ணீர் மல்க வழி அனுப்பி கொண்டிருக்கின்றனர் அவர்களின் உறவினர்கள்.

ஆம்… கொரோனா வைரஸ் தாக்கதால் தனித்தீவாக மாறியுள்ளது சீனாவின் வுகான் மாகாணம்.

இங்கு நோய் பாதிப்பு இல்லாத மக்களை வெளியேற்றியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக தீவிரமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் முடங்கி இருக்கும் மக்கள் எந்த நேரத்தில் தங்களுக்கு என்ன நேருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

காற்று மூலம் பரவக்கூடிய நோய் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் வந்து மீட்கும் வரை யாரும் காப்பாற்ற வருவதில்லை. 

வுகானில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவ, அந்த மாகணத்திற்கு பிற மாகணங்களில் இருந்து மருத்துவர்கள் தன்னார்வலராக சிகிச்சை அளிக்க செல்கின்றனர்.

அப்படி செல்லக்கூடியவர்களை அவர்களின் உறவினர்கள் வழியனுப்பும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உயிரை கொல்லும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு அந்நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பிற நகரங்களில் இருந்து செல்லும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் செல்கிறார்கள்.

அவர்கள் மீண்டும் குடும்பத்துடன் வந்து சேர்வார்களா என்பதை அறியாதவர்கள் அவர்களை கண்ணீர் மல்க வழியனுப்பும் காட்சி காண்போர் இதயத்தை கனக்க வைக்கிறது. 

இது உலகின் மிகப்பெரிய அணு உலை விபத்தான செர்னோபில் விபத்தின் தீயை கட்டுப்படுத்த சென்ற தற்கொலை படை போல், மக்களை காப்பாற்ற இவர்கள் செல்கிறார்கள் என இணையத்தில் அந்த மருத்துவர்களின் சேவையை பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் கொரோனாவிற்கு எதிராக பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்கள் தலைமுடியை குட்டையாக வெட்டி மருத்துவ பணியாற்றி வருகிறார்கள். 

குறைவான முடியிருந்தால் தொற்றுக்கள் குறையும் என்பதால் இதனை அந்த செவிலியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சேவை புரியும் மருத்துவர்களின் இந்த செயலை வீரமிக்க செயல் என சமூக வலைதளங்களில் பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே