உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் : 94ஆவது இடத்தில் இந்தியா..!!

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் `உலகளாவிய பட்டினி மதிப்பீடு’ என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

107 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது.

அண்டை நாடான பங்களாதேஷ், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் மோசமான நிலையில் இருந்தாலும், அவை இந்தியாவை விட மேம்பட்டதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் 75 வது இடத்திலும், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் 78 மற்றும் 88 வது இடத்திலும் உள்ளன.

73 வது இடத்தில் நேபாளமும், 64 வது இடத்தில் உள்ள இலங்கையும் உள்ளன.

சீனா, பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா மற்றும் குவைத் உள்ளிட்ட பதினேழு நாடுகள் ஐந்திற்கும் குறைவான மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டன என்று பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்காணிக்கும் உலகளாவிய பசி குறியீட்டின் வலைத்தளம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போதைய அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாவார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சி விகிதமானது 37.4 ஆகவும், இறப்பு விகிதம் 3.7 ஆகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாடானது, குழந்தைகளின் உடல் எடை மற்றும் உயரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

செயல் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பலவீனம், உரிய கண்காணிப்பு இல்லாதது, ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கையாள்வதற்கான மோசமான அணுகுமுறைகள் ஆகியவைதான் இந்தியாவின் தற்போதைய நிலைக்கு காரணம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் தரவரிசையில் ஒட்டுமொத்த மாற்றத்தைக் காண உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று புதுடெல்லியின் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி சக பூர்ணிமா மேனன் தெரிவித்தார்.

“இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு ஐந்தாவது குழந்தையும் உத்தரபிரதேசத்தில் உள்ளது.

ஆகவே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் அதிக ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், அது இந்தியாவின் சராசரியை வெளிப்படையாக பாதிக்கின்றது.” என பூர்ணிமா செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே