தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு அறிவிப்பதில் தாமதம் ஏன்? எப்போது அறிவிப்பு தெரியுமா?

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம், நாடு முழுவதும் ஏழாம் கட்டமாக வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நாடு முழுவதும் UNLOCK செயல்முறை தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிகாட்டுதலின் இதனை பின்பற்றி வரும் மாநிலங்கள், தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அளித்து வருகிறது.

இதனிடையே, 7ஆம் கட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், UNLOCK 4.0 தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடம் பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதி, திறந்தவெளி திரையரங்குகளுக்கு அனுமதி, கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான செப்டம்பர் 30ஆம் தேதி வரை தடை, இபாஸ், உள் ஊரடங்கு போன்ற நடைமுறைகள் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் UNLOCK 4.0இல் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை பொது முடக்கம் மற்றும் தளர்வுகளில் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாநில மக்களிடையே எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீடிப்பு, தளார்வுகள் அறிவிப்பு என்று எந்த விஷயமாக இருந்தாலும் மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைக்கு பின்னரே முதல்வர் எடுத்து வருகிறார். அதன்படி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

எனினும், இதுவரை பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை. தமிழக அரசு சார்பில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்பு, நேற்றே தயாராகிவிட்ட நிலையில், மத்திய அரசின் Unlock 4.0 அறிவிப்பு காரணமாக,ஏற்கனவே தமிழக அரசு தயாரித்த வழிகாட்டு நெறிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் தமிழக அரசின் அறிவிப்பு வெளியாவதில் தாமதமாவதாக தெரிகிறது. அதேசமயம், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி, கிட்டத்தட்ட இயல்புநிலைக்கு தமிழகம் திரும்பி விட்டதாக சற்று ஆறுதலடைந்தாலும், பொது போக்குவரத்து எப்போது தொடங்கப்படுமோ அப்போதுதான் உண்மையான இயல்புநிலைக்கு தமிழகம் திரும்பும் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

இந்த முறை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளை தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டு, பொதுப்போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், கடைகள் திறக்கப்படும் நேரம் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே